Saturday, September 15, 2007

வெள்ளித்திரை

திரைப்படம் ஒரு சக்திவாய்ந்த ஊடகம்,பொழுதுப்போக்கிற்காக தொடங்கிய இந்த வெள்ளித்திரை சமூகப்போக்கிற்கும் காரணமாயிற்று, சமூக அவலங்களை பிரதிபளிக்கவும், பல சமயம் அந்த அவலங்களுக்கு விதையாகவும் இருக்கிறது.
இயல்பான நம் வாழ்க்கையின் பிரதிபளிப்பே சினிமா,அதையே சில நேரங்களில் சினிமாத்தனத்துடன் சற்று மிகைப்படுத்தி காண்பிக்கப்படுகிறது.அவற்றை சீர்ப் பிரித்து நல்ல செய்திகளை உள் வாங்கினால் தவறில்லை.ஆனால் நம்மில் பலருக்கு அதை சீர்ப்பிரிக்க நேரமும் இல்லை, அதற்கான எண்ணமும் இல்லை.

இந்த சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு நம் சமூகத்தில் கொடுக்கபட்டுள்ள இடம்,மிகைப்படுத்தி காண்பிக்கப்படுகிற அந்த சினிமாவை விட மிகைபடுத்தப்பட்ட இடம்.ஆம் அவர்களை ஏதோ சொர்க்கலோக வாசிகளைப் போலவும்,காணக்கிடைக்காத ஒரு உன்னதப் பொருளைப் போலவும் காண்கிறோம்.இதற்கெல்லாம் அவர்கள் உரியவர்களா என்றால் நிச்சயம் இல்லை.அவர்களும் நம்மைப் போல் சாதாரண மானிடப்பிறவிதான். பின்னெதற்கு அவர்களை பார்க்கும் போதுமட்டும் ஒரு அசாதாரணப்பார்வை.நாம் பார்க்கும் இந்த பார்வையை அவர்கள் நன்கு பயன்ப்படுத்திகொள்கிறார்கள்.நான் அனைத்து சினிமாத்துறை நண்பர்களையும் சுட்டிகாட்டவில்லை,ஆனால் அதில் சராசரியை விட அதிகமானோர் சந்தர்ப்ப சுயநலவாதிகளாகத்தான் இருக்கிறார்கள்.

ரசிகர் மன்றம் என்ற பெயரில் நம் இளையர்கள் முடக்கப்படுகிறார்கள் / முடங்கியிருக்கிறார்கள்.அவனுடைய முழுமூச்சும்,கனவும் தன் அபிமான நடிகர்/நடிகையைப் பற்றித்தான் சுழன்று வருகிறது.நம் முதல் குடிமகன் காணச்சொன்ன கனவை இப்படியா காண்பது?.அவன் தன் நாட்டிற்கும், சமூகத்திற்கும் குறைந்தபட்சம் தன் வீட்டிற்கும் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தடம்புரண்டுகிடக்கிறான்.
தன் வீட்டிற்கு பால் வாங்க நேரமும்,பணமும் இல்லாத நம் இளையதலைமுறை, “இளையதளபதி” படத்தின் முதல் நாள் அன்று “கட்அவுட்டிற்கு” பால் அபிஷேகம் செய்ய தன் உழைப்பையும் பணத்தையும் விரயம் செய்கிறான். இன்னும் சில இடங்களில் தன் வீட்டில் சோறு இல்லையெனினும் “தல” படத்திற்கு ‘பீர்’ அபிஷேகம் செய்வது இதன் உச்சகட்ட அவலநிலை.அவனது அகராதியில் சமூகப்பொருப்பு என்பது தன் அபிமான நடிகர்/நடிகை முதல் நிலையை அடையச்செய்வது ஆனால் இதனால் அவன் சமூகத்தில் கடைசி நிலைக்குத் தள்ளப்படுவதை அறியாமல் இருக்கிறான்.

புதிய குளிர்பான அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை,தான் குடித்து வைத்த பாதி குளிர்பானப் பாட்டிலுக்கும்,அதன் அடைப்பானிற்கும் ரசிகர்களிடையே நடந்த போட்டியைப் பார்த்து,தன் வீட்டில் தான் உபயோகித்த பழையப் பொருட்களை ஏலம் விடப்போவதாக சொன்னார்.நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்த நடிகையின் பங்கு நம்மை பிரம்மிப்படைய வைக்கிறது.விளையாட்டில் தோற்றாலும்,நடிகையை முத்தமிட்டாலும் செய்யும் போராட்டங்கள்,சமூக அவலங்களை எதிர்க்க நடந்தால் பாராட்டப்படும்.

சமூக நிகழ்வுகளின் கண்ணாடியாகவும்,மக்களின் விழிப்புணர்ச்சிகாகவும், செயல் படவேண்டிய பத்திரிக்கைத்துறை, வியாபாரநோக்கத்திற்காக சினிமாவை ஒரு கருவியாக்கி மக்களை சிறிய வட்டத்தினுள் அடைத்துள்ளது. நடிகர்/நடிகைகளின் திருமணம் என்றால் ஒரு முழுப்பக்க செய்தி,அடுத்து அவர்கள் தேனிலவுக்கு எங்கு செல்வார்கள் என்று புதிர்ப்போட்டி,அவர்களே கருத்தரித்தால் அதற்கும் ஒரு போட்டி,அவர்கள் விவாகரத்தும் செய்தி, இந்த அளவிற்கு இன்றைய பத்திரிக்கைகள் செயல்படுகிறது.சமீபத்தில் நடந்த உலக அழகியின் திருமணச்செய்தியை சிங்கை பத்திரிக்கை ஒன்று, ஒரு வாரம் தொடர்ந்து ஒருப்பக்க செய்தியாக வெளியிட்டது.நடிகையின் நிச்சயம்,திருமணம்,தேனிலவு,அவர்கள் திருப்பதி சென்றது, அங்கு லட்டு வாங்கியதும் ஒரு செய்தி..
நமது கவிஞர்களின் கவிதைத் தொகுப்பிற்கும், எழுத்தாளர்களின் எழுச்சிமிகும் சிறுகதைகளுக்கும் ஒதுக்கப்படுவது வாரம் ஒருப்பக்கம் ஆனால் நடிகைகளுக்கு வாரம் முழுவதும் ஒவ்வொருப்பக்கம். நடிகர்/நடிகைகளின் ஒரு இயல்பான வாழ்க்கை நிகழ்வும் இங்கு செய்தியாக்கப்படுகிறது. தனியார் தொலைக்காட்சியிலும் இதே அவலநிலைதான்,சுதந்திர தின நாள் அன்று கவர்ச்சி நடிகையின் பேட்டி,தமிழர் திருநாளில் ஆங்கில மொழிப்பெயர்ப்புடன் தமிழ்தெரியாத தமிழ் நடிகையுடன் உறையாடல் நிகழ்ச்சி. என அனைத்திலும் சினிமாத்தனம்.

அவர்களிடம் கேட்டால் மக்களுக்காக என்கிறார்கள், மக்களோ அவர்கள் திணிப்பதால் தான்ப் பார்க்கிறோம் என்கிறார்கள்.ஆக சமூகம் சீரழிவை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.இப்பயணத்தை நிறுத்த நடிகைகளுக்காக ஒதுக்கப்படும் பக்கங்கள் சமூக விழிப்புணர்ச்சிக்காக ஒதுக்கப் படவேண்டும்.அப்படியும் சினிமாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பக்கங்களும்,நிகழ்ச்சிகளும் மக்களால் ஒடுக்கபடவேண்டும்.

இந்த சீரழிவை நோக்கிய பயணத்தைத் தடுக்க, நானும் பயணிக்கிறேன். தற்போதையப் பயணம் தனிமையில் ஆனாலும் ஒரு "ஊர்வலம்" வந்துகொண்டிருக்கிறது எனும் நம்பிக்கையில்...


இதமுடன்,

இரா.பிரவீன் குமார்.

மக்கள் சக்தி இயக்கம்

மக்கள் சக்தி இயக்கம் திரு.உதயமூர்த்தி அய்யா அவர்களால் 1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.வேதியியல் பொறியாளரான அய்யா,அமெரிக்காவில் வணிகம் செய்து பின் தாய் நாடு திரும்பி,தமிழுக்காகவும் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்காகவும் சீறிய பணி செய்துகொண்டிருக்கும் தருவாயில் தொடங்கப்பட்டதே இந்த மக்கள் சக்தி இயக்கம். ஆரம்ப கட்டத்தில் தேசிய நதிநீர் இணைப்புக்காகவும் கிராமப்புர வளர்ச்சிக்காவும் குரல் கொடுத்த இந்த இயக்கம் பின் பல சமுதாய வளர்ச்சிக்காகவும் குரல் கொடுத்தது. திரு.உதயமூர்த்தி அய்யா அவர்கள் சிறந்த எழுத்துப்பணியிலும் ஈடுப்பட்டிருந்தார்.
அவரின் "எண்ணங்கள்" என்ற புத்தகம் மக்களிடையே பெரும் வறவேற்ப்பை பெற்றது. அவருடைய வைரவரிகள் இளையர்களிடையே புத்துணர்ச்சியையும், தம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தையும் விதைத்தது.நான் புத்தகங்கள் படிப்பதற்கும் அய்யாவின் எழுத்துக்களே அடிகோலாக இருந்தது. இயக்குனர் திரு.பாலச்சந்தர் அவர்கள் "உன்னால் முடியும் தம்பி" என்ற படத்தை உருவாக்கி அதில் கதாநாயகனுக்கு உதயமூர்த்தி என்ற பெயர் இட காரணமாக இருந்ததும் இவருடைய புத்தகங்களே.திரு.உதயமூர்த்தி அய்யா அவர்களுடைய பல வரிகள் நெஞ்சில் நீங்கா இடம் கொண்டுள்ளது. அவற்றில் சில நான் ரசித்தவை என்ற தலைப்பில் இந்த இணையவலையில் அரங்கேற்றி உள்ளேன்.
பலபரிமாணங்களை கண்ட மக்கள் சக்தி இயக்கம், தற்பொழுது புத்தக வடிவில் ஒரு புரட்சியே செய்துக்கொண்டிருக்கிறது. ஆம் கடந்த ஐந்து,ஆரு மாதமாக இளையர்களின் பெரும் பங்களிப்பொடும் அய்யா அவர்களின் தலைமையில் "நம்பு தம்பி நம்மால் முடியும்" என்ற பெயரில் மாத இதழாக வெளிவருகிறது. இந்த புத்தகத்தின் தாரக மந்திரம் சமூக அரசியல் மாற்றம். சினிமாத்துறையை நம்பியே வெளிவரும் புத்தகங்களுக்கு மத்தியில், சினிமாத்தனம் சற்றும் அண்டாத இந்த முயற்சி பாராட்டுக்குரியது. மக்கள் அனைவருக்கும் அவர்களின் அடிப்படைத் தேவையாக உண்ண உணவு, உடுத்த உடை மற்றும் இருக்க இருப்பிடம் தேவை.
சுகாதாரமான கழிப்பிடம் கூட இல்லாத நிலைமையில் இருந்து விடுதலை வேண்டும்.இந்த தேவையை பூர்த்தி செய்ய தனிமனித ஒழுக்கம் மட்டும் பொதாது.தவறு செய்யும் அரசியல்வாதியும் அதற்க்கு உடைந்தையாக இருக்கும் அதிகாரியும் மாற அல்ல மாற்றப்படவேண்டும்.இந்த களை எடுக்கும் நடவெடிக்கை பணியை கையாண்டுகொண்டிருக்கிறது இந்த இதழ்.ஆம் இது சமூக அரசியல் மாற்றத்திற்க்கான மாத இதழ்.
மாதந்தொரும் வெளிவரும் இந்த சஞ்சிகை மக்களிடையே அரசியல் விழிபுணர்ச்சியை ஏற்படுத்திகிறது.அதுமட்டும் இன்றி இன்றைய இளையர்கள் மத்தியிலும் ஒரு நல்ல வறவேற்பை பெற்றுள்ளது.கல்லூரி மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சிமூலம் தனிமனித ஒழுக்கத்துடன் கூடிய சமூக உணர்வை விதைக்கும் பணியையும் செவ்வனே செதுக்கிவருகிறது.இந்த புத்தகத்தை படிக்க விரும்பும் இதயங்கள் கீழே உள்ள முகவரியை நாடலாம்.இல்லையெனில் இணையம் மூலமும் வாங்கலாம். www.anyindian.com.
மக்கள் சக்தி இயக்கம்,
17-A, தெற்கு அவின்யூ,
திருவான்மியூர்,சென்னை - 600041
தொலைபேசி - 24421810 , 9443562030
மின்னஞ்சல் - mse1988@gmail.com